Monday, August 13, 2012

ராகு-கேது பரிகாரத் தலம் பூவரசங்குப்பம்

மனித வாழ்வில் யோகம், மகிழ்ச்சி, ஞானம், முக்தி ஆகியவற்றை நிர்ணயிக்கின்ற சக்தி ராகு-கேது என்கிற இரண்டு கிரகங்களுக்கும் உண்டு. இவை தோஷத்தை மட்டும் தராமல் யோகத்தை வழங்குவதிலும் நிகரற்றவை. நாகதோஷம் இருக்கும்போது, எவ்வளவு ஆற்றலும் முயற்சியும் இருந்தாலும் முன்னேறுவது கடினம் என்கிறது ஜோதிடம். திருமணத் தடையும் இதனாலேயே ஏற்படுகிறது. இந்த தோஷங்களிலிருந்து விடுபட காளஹஸ்திக்குச் சென்று சர்ப்ப தோஷ நிவர்த்தியும் பரிகாரமும் செய்கின்றனர்.

 அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள சிவலோகநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தை நடுநாட்டு திருநாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றும் போற்றுகிறார்கள். பல்லவ மன்னன் ஒருவன் சைவ-வைணவ ஆலயங்களை இடித்ததால், நரஹரி என்ற முனிவரின் சாபம் ஏற்பட்டது. சாப விமோசனம் வேண்டி அவன் முனிவரைத் தேடிப் போனபோது ஒரு பூவரசு மரத்தின் கீழ் தங்கினான். மரத்தினின்று கீழே விழுந்த ஒரு பூவரசு இலையில் லட்சுமி நரசிம்மர் ஆவிர்பவித்திருப்பதைக் கண்டு திகைத்தான். உடனே, நரசிம்மருக்கு அங்கேயே ஆலயம் எழுப்பினான். பூவரசு இலையில் நரசிம்மர் தோன்றியதால் இந்த தலத்திற்கு பூவரசங்குப்பம் என்கிற பெயர் ஏற்பட்டது.

இங்குள்ள பழமையான சிவாலயத்தில் நாகநாதேஸ்வரர், கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். இறைவி, சிவலோக நாயகி. சிதிலமடைந்து கிடந்த இந்தப் பழமையான ஆலயத்தை பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். நாகேஸ்வரரின் வலப்பக்கம் தனி சந்நதியில் தெற்கு நோக்கி அம்பாள் காட்சியளிக்கிறாள். வெளிப் பிராகாரத்தில் தனிச் சந்நதிகளில் ராகு-கேது, தம் தேவியருடன் எழுந்தருளியிருக்கின்றனர். இத்தலம் இங்கு தோன்றியதன் பின்னணியில் வேறொரு சம்பவமும் கூறப்படுகிறது. பல்லவ மன்னனான சிம்மவர்மன் பல இடங்களில் ஆலயங்களைக் கட்டும் பொருட்டு காடுகளையும் மலைகளையும் சீர் செய்தான். அப்போது அங்கு வசித்து வந்த நாகங்களைக் கொல்ல நேர்ந்தது. அதனால் அவனுக்கும் அவன் வம்சத்திற்கும் நாகதோஷம் ஏற்பட்டது. இங்குள்ள தட்சிண பினாகினி என்ற தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரைச் சந்தித்து அவர் அறிவுரையைக் கேட்டான்.

அந்த முனிவர் பூவரசங்குப்பத்தின் ஒரு மூலையில் புற்று ஒன்றில் சுயம்புவாக உள்ள சிவலிங்கத்தை நாகமொன்று பூஜித்து வருகிறது என்றும் அங்கு சென்று நாகத்தை வழிபட்டு, சிவலிங்கத்தை எடுத்து ஆலயம் எழுப்பினால் நாகதோஷம் நீங்கும் என்றும் கூறினார். மன்னனும் நாகத்தை வழிபட்டான். அந்த கருநாகம் வெளியே தோன்றி, ‘‘ஈசனின் பெயரோடு தன் பெயரையும் இணைத்து நாகேஸ்வரர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்து வழிபடு’’ என்றது. அதற்கு மன்னனும் சம்மதிக்க, அந்த நாகம் தன் குட்டிகளுடன் புற்றிலிருந்து வெளியேறியது. மன்னன் புற்றை அகற்றி சிவலிங்கத்தைக் கண்டெடுத்து பிரம்மபாகம், விஷ்ணுபாகம் ஆகியவற்றைச் செய்து கருங்கல் ஆலயம் அமைத்தான். ஈசனுக்கு நாகேஸ்வரர் என்று பெயரிட்டு குடமுழுக்குச் செய்தான். குடமுழுக்கு நாளன்று புற்றிலிருந்த நாகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிக் கொண்டு காட்சி அளித்து, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் மன்னனின் வேண்டு கோளின்படி பக்தர்களின் கண்களில் படாமல் இன்றும் நாகநாதரை அது பூஜித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த நாகத்தால் இதுவரை எந்தவித இடையூறும் ஆபத்தும் ஏற்பட்டதில்லையாம். இப்போதும் அரிதாக அந்த நாகம் பக்தர்களின் கண்களுக்குத் தோன்றி அருட்காட்சி அளிப்பதாக பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். மேலும் நாகதோஷம், காலசர்ப்ப தோஷங்களையும் போக்கி இந்த ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

நாளடைவில் ஆலயம் பழுதாகி, மீண்டும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் விநாயகர், நந்தீசர், சண்முகர், வள்ளி - தெய்வானை சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்டனவாம். கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் அனைத்தும் கருங்கற்கள் திருப்பணிகளே. அர்த்த மண்டபத்தில், கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் செந்தூர விநாயகரும் தண்டபாணியும் காட்சி அளிக்கின்றனர். பால கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் பெருமாள், வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரும் உள்ளனர். இடையில் சண்டிகேஸ்வரர் சந்நதி உள்ளது. வடமேற்கே வள்ளி-தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார். வேண்டிய வரங்களை தன் பக்தர்களுக்கு அருளும் பாவனையில், உடனே புறப்படத் தயாராகும் நிலையில் காட்சி தருகிறார். வடகிழக்கில் நவகிரக சந்நதி உள்ளது. பைரவர் மேற்கு பார்த்தும் தென்கிழக்கில் சூரியன், ராகு-கேதுவைப் பார்த்தபடி நாகதேவியும் அருள்பாலிக்கின்றனர்.

ராகு பகவான் தனி சந்நதியில் தன் தேவியர் சித்ரலேகா, சிம்ஹியுடன் கிழக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார். கேது பகவானும் இவர்களுக்குக் காவலாக எட்டு நாகங்களும் உள்ளன. நடுநாட்டு நாகேஸ்வரம், நடுநாட்டு காளஹஸ்தி என்றெல்லாம் போற்றப்படும் இத்தலத்தில் நாகேஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று விசேஷ வழிபாடுகளும் ராகு-கேது கிரகங்களுக்கு சர்ப்ப சாந்தி ஹோமங்களும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன. ஆலயத்தைப் பற்றிய இதர விவரங்களுக்கு 9442010834 மற்றும் 9486748013 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. 

No comments:

Post a Comment