Friday, December 30, 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஸ்ரீ சனிஸ்வர பகவான்.
 நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக, உதயாதி நாழிகை 2.17-க்கு நேத்திரமும், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில், புதன் ஓரையில், சரியாக காலை மணி 6.55-க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி நடந்தது.

16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து, தன் ஆதிக்கத்தைச் செலுத்துவார். இடையில்... மார்ச் 26, 2012 முதல் செப்டம்பர் 11, 2012 வரை சனி பகவான் வக்ரகதியில் கன்னி ராசிக்குள் சென்று திரும்புகிறார்.

மேஷம் :
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளை தந்த சனிபகவான், வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி காலத்தில் வலுவடைந்து, 7-ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். இருவருக்கும் சண்டை, சச்சரவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள்.

மாதவிடாய்க் கோளாறினால்,  ஆரோக்கியம் பாதிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.


சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமரும் காலகட்டத்தில் திடீர் பணவரவு, வாகன யோகம் உண்டாகும். செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும் காலகட்டத்தில் சற்றே உடல் நிலை பாதிக்கும். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் காலகட்டத்தில் எதிலும் வெற்றி உண்டாகும். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்லும்போது செல்வம் பெருகும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள்.

உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணரும் காலம்.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து இதுவரை பல வகைகளிலும் அலைக்கழித்த சனிபகவான், வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி காலத்தில் 6-ம் வீட்டில் அமர்வதால்... தொட்ட தெல்லாம் துலங்கும்.


அடிவயிற்றில் வலி இருந்ததே! அடிக்கடி இருமிக் கொண்டும் இருந்தீர்களே! இனி ஆரோக்கியம் கூடும்.பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நாடாளுபவர்கள் அறிமுக மாவார்கள்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமரும் காலத்தில்... பிள்ளைகளால் டென்ஷன், உறவினர் பகை வந்து நீங்கும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும் காலகட்டத்தில் கௌரவம் உயரும். வீடு, மனை வாங்குவீர்கள். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது பணப்பற்றாக்குறை ஏற்படும்.

பரிகாரம்: திருநெல்வேலி, தென்திருப் பேரை ஸ்ரீகைலாசநாதரை ஆயில்யம் நட்சத்திர நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தரும் காலம்.

மிதுனம் :

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து பல இன்னல்களை இதுவரை தந்து வந்த சனிபகவான், இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் 5-ம் வீட்டில் அமர்வதால்... உங்களின் தயக்கம், பயம் நீங்கி, மனவலிமை கூடும். பூர்விக சொத்து கைக்கு வரும்.

கணவருடன் உரிமையாக பேசி, கூடா பழக்க வழக்கங்களிலிருந்து அவரை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சனிபகவான் வக்ரமாகும் காலத்தில், உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத்தில் பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிட்டும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது, சொத்து வாங்குவீர்கள்.  குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்லும்போது மாமனார், மாமியார் மதிப்பார்கள்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன்கோயில் அருகிலுள்ள திருப்புன்கூர், ஸ்ரீசிவலோக நாதரை, கேட்டை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

தடைகளை உடைபட வைப்பதுடன் அதிரடி முன்னேற்றங்களை தரும் காலம்.

 கடகம் :

இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான், இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால், ஓரளவு நிம்மதியே தருவார். உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் 8-ம் வீட்டுக்கு அதிபதியாக அமைவதால், கணவரின் கை ஓங்கும்.

அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் எடுத்த வேலையை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும்.

சனி பகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமரும் காலகட்டத்தில் புதுவீடு கட்டி குடி புகுவீர்கள். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலத்தில் வி.ஐ.பி-க்கள் அறிமுகமாவார்கள். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத்தில் திடீர் பயணங்கள் வரும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் செல்லும்போது, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

பரிகாரம்: திருநெல்வேலி, பாபநாசம், ஸ்ரீபாபநாச நாதரை மூலம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

முதல் முயற்சியில் முடிக்காமல் போனாலும், இடைவிடாத உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.

சிம்மம் :

இதுவரை பாதச்சனியாக அமர்ந்து உங்களை நாலாவிதங்களிலும் பாடாய்ப்படுத்திய சனிபகவான், சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களை விட்டு விலகி 3-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறு வீர்கள்.

நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்து கொண்டிருந்த நீங்கள், ஆரோக்கியம் அடைவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச்சனியாக அமரும் காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு, உடல் நல பாதிப்புகள் வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் செல்லும் காலகட்டத் தில் குடும்பத்தில் நல்லது நடக்கும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலத்தில் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலத்தில் உங்கள் செல்வாக்கு உச்சத்தை அடையும்

பரிகாரம்: வேதாரண்யம், ஸ்ரீவேத வனேஸ்வரரை புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

அதிரடி வெற்றிகளையும், அடிப்படை வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தரும் காலம்.
கன்னி :

இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்கள் நிம்மதியை சீர்குலைத்த சனிபகவான், சனிப்பெயர்ச்சி  காலகட்டத்தில் உங்கள் ராசியைவிட்டு விலகி, பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

எப்போதும் தலைவலி, வயிற்று  வலி என வலி பற்றியே பேசிக் கொண்டிருந்தீர்களே! இனி உடல் நிலை சீராகும். கணவர் எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவித கவலையில் ஆழ்ந்திருந்தாரே! இனி சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார். என்றாலும், பாதச்சனியாக வருவதால் கணவருடன் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து செல்லும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்கின்ற காலகட்டத்தில் நம்பிக்கையின்மை ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில், சனி பகவான் செல்லும்போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலங்களில் நினைத்த காரியம் நிறைவேறும். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்: திருவையாறு, திருப்பழனம், ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை சதய நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

புது முயற்சிகளில் வெற்றியும், தோற்றப் பொலிவும், ஆரோக்கியமும் வந்து சேரும் காலம்.
துலாம் :

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து சேமிக்க முடியாதபடி செலவுகளைத் தந்த சனிபகவான், இப்போது ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். அதற்காக அஞ்சத் தேவையில்லை. சனிபகவான் உங்களுக்கு சுகப் பூர்வ புண்யாதிபதி யாக வருவதால் நல்லதையே செய்வார்.கணவரின் பாராமுகம் மாறி, பாசமாகப் பேசுவார். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜென்மச் சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் கடன் பிரச்னை, வீண் விரயம், தூக்கமின்மை வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில், அரசால் ஆதாயம் உண்டு. ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசிக்கும் காலத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும்.

பரிகாரம்: கும்பகோணம், தேரெழுந்  தூரில் வீற்றிருக்கும் தேவாதிராஜப் பெருமாள்- ஸ்ரீசெங்கமலவள்ளித் தாயாரை ரோகிணி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.
ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த உங்களுக்கு பணப்புழக்கம் மற்றும் மகிழ்ச்சி  தரும் காலம். 
விருச்சிகம் :

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்களின் புகழ், கௌரவத்தை உயர்த்திய சனிபகவான்,  இனி விரயச் சனி, ஏழரைச் சனியின் தொடக்கம் என்று மாறப் போகிறார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி பகவான், ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சிக்கனமாக இருக்கப் பழங்குங்கள்.

'ஏழரைச் சனி தொடங்குகிறதே!’ என்று கலங்க வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான், மன இறுக்கத்தையும், பயத்தையும் தந்தாரே! ஆனால், தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் தொட்ட காரியம் துலங்கும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில், சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்லும்போது, வேற்று மதத்தவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: சிதம்பரம் நடராஜர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளை பூரம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.

அனுபவபூர்வமான பேச்சால் வெற்றியும், வளைந்து கொடுக்கும் போக்கால் வளர்ச்சியும் கிடைக்கும் காலம்.

தனுசு
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் அவமானங்களையும், முயற்சிகளில் இடையூறுகளையும் தந்த சனிபகவான், இப்போது லாப வீட்டில் அமர்கிறார். கடினமாக உழைத்தும் அதற்கான பலனேதுமில்லாமல் போனதே! அடுத்தடுத்து செலவுகளாலும், வேலைச்சுமையாலும் அவதிப்பட்டீர் களே! இந்தத் தொல்லைகள் நீங்கும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மாமனார், மாமியார் மெச்சுவார்கள். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கு வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும்.
சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் வீண் டென்ஷன், மறைமுக அவமானம் ஏற்படும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும்போது வெளிநாட்டில்இருக்கும் தோழிகளால் திடீர் திருப்பம் உண்டாகும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் சனிபகவான் பிரவேசிக்கும்போது சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
பரிகாரம்: மயிலாடுதுறை, திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதரை உத்திரம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.
சுறுசுறுப்போடு... வசதி, வாய்ப்புகளையும் தரும் காலம்.
மகரம் :

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து, இதுநாள் வரை தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாற்றங்களைத் தந்து, சேமிப்பு களையும் கரைத்த சனிபகவான், இப்போது 10-ம் வீட்டில் அமர்வதால் பதவிகளும், கௌரவமும் தேடி வரும். சனிபகவான் உச்சமாகி யோகாதிபதி யான சுக்கிரனின் வீட்டில் அமர்வதால்... இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள்.

கணவரின் கோபம் குறையும். உங்களின் பெருந்தன்மையை இனிமேல் புரிந்து கொள்வார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.  

சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஒரு வித படபடப்பு வரும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும்போது வயிற்று வலி, முதுகு வலி, முழங்கால் வலி வந்து நீங்கும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் காலகட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குரு பகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டங்களில் மனோபலம் அதிகரிக்கும்.

பரிகாரம்: விருத்தாசலம், விருத்த  கிரீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஆழத்து விநாயகரை சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.

முடங்கிக் கிடந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன் செயற்கரிய செயல்களையும் செய்ய வைக்கும் காலம்.

கும்பம் :
இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலற வைத்து, அழ வைத்த சனிபகவான், இப்போது 9-ம் வீட்டில் அமர்வதால்... இனி எல்லா வற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். சாதிக்க வேண்டுமென்ற துணிச்சல் வரும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். பழைய பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
சனிபகவான் வக்ரமாகி உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் விரக்தி, பதற்றம், ஏமாற்றம் வந்து செல்லும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது திருமணத் தடை நீங்கும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலகட்டத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.
பரிகாரம்: மாமல்லபுரம் அருகிலுள்ள திருவிடந்தை ஸ்ரீலக்ஷ்மி வராகப் பெருமாளை பூச நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்.  
கவலையும், கண்ணீருமாக இருந்த உங்களுக்கு... நிம்மதியும் நிதியும் வந்து சேரும் காலம்.

மீனம் :
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அவ்வப்போது ஆரோக்கிய குறைவைத் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான், இப்போது 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தமான முயற்சிகள் தாமதமாகி முடியும்.
சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்கின்ற காலகட்டத்தில் உங்களுக்கும், கணவருக்கும் உடல் நலக் கோளாறுகள் வரும். செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கின்ற காலகட்டத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும்போது, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும். குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது... கல்யாண முயற்சிகள் கைகூடும்.
பரிகாரம்: சுவாமிமலை அருகிலுள்ள திருஆதனூர் ஸ்ரீஆண்டளக்குமையன் பெருமாளை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்.

 

Saturday, December 17, 2011

ஏழரைச் சனி என்னதான் செய்யும்?

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை மங்கு சனி என்றும் அழைப்பர்.

முதல் சுற்று:

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.


குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.


மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.


ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.


இரண்டாவது சுற்று:

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?


‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள்.


அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?
வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’  என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான்.

‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.
கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனிபகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.


மூன்றாவது சுற்று:

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். 

இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். 

ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.
ஜோதிடரத்னா.கே.பி.வித்யாதரன்.

Saturday, December 10, 2011

சங்கடம் தீர்ப்பார் சனீஸ்வர பகவான்.

நவகிரகங்களுள் மிகவும் சக்தியும், பலமும் வாய்ந்தவராக கருதப்படுபவர் சனிபகவான். பற்பல சிவன் கோயில்களில் இவருக்குத் தனி சந்நதிகள் இருந்தாலும், திருநள்ளாரில் இருக்கும் தர்ப்பராண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு திசையில், மகரம்., கும்பம் ராசிகளின் அதிபனாக காக்கை வாகனத்தோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சாந்தி, பொறுமை, கருணை ஆகிய மேலான குணங்களைக் கொண்டு ஆதிமூர்த்தியாம் அந்த திருநள்ளாராரை தியானிக்கும் பக்தர்களுக்கு தன்னால் வந்த, அதாவது சனி தோஷத்தால் வந்த நோய், பொருள் விரயம், பேராபத்து, சஞ்சலம், துக்கம், விரக்தி, சோம்பல், தொழில் இடையூறு என அனைத்து சோதனைகளையும் நீக்கும் நீதி அரசராக கலியுகத்தில் சனி ஆட்சி செய்யும் இடம் இந்த தர்ப்பைக் காடு என்ற திருநள்ளாறு.

இங்கு உள்ள மூலவர் ஆதிமூர்த்தி நள்ளாரார்  தர்ப்பராண்யேஸ்வரர், தானே உதித்த சுயம்பு மூர்த்தி. இது சப்தவிடங்க சிவ தலங்களுள் மிகவும் போற்றப்படுவது. அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற மேலோர்களால் பாடப்பட்ட தலம். சிவபெருமான் உன்மத்த நடனம் செய்யும் தலம். நூலாறு, வஞ்சியாறு என இரண்டு நதிகள் வடபுறமும், தெற்கே அரசலாறு ஓட இடையே சனி பகவான் கருணையே வடிவாக நின்ற கோலத்தில் அருள் பரிபாலிக்கின்றார்.

மணி என்ன? என்றால் ஏழரை என்று நம் முன்னோர்கள் சொன்னது இல்லை. போடி சனியனே என்று மனைவியை சொன்னால் ஒருவாரம் சோறு கிடையாது. அப்படிப்பட்ட குரூர குணங்கொண்ட சனிபகவான் கருணை, சாந்தம், பொறுமை, மகிழ்ச்சி பொங்க வீற்றிருப்பது இங்குதான்.

ஏன்? நள மகாராஜன் என்ற நிஷத நாட்டு சக்ரவர்த்தி, தன் அழகு, நாடு, ஆஸ்தி, மனைவி அனைத்தையும் இழந்து, மடையனாக மாமனின் அரண்மனையிலேயே சமையல் வேலை என்னும் சேவகம் புரிந்து வந்தான். ஒருமுறை நாரதர் அவன் கனவில் தோன்றி, நள்ளாரார் என்னும் சிவனைத் துதிக்கச் சொல்லி, பின் சனி பகவானை வணங்கும் முறையையும், ஸ்தோத்திரத்தையும் உபதேசித்து அருளினார். நளச் சக்ரவர்த்தியும் நள்ளாறு ஈசனுக்கு, பால், தயிர், பழரசம், சந்தனக் குழம்பு, பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து சாதத்தில் நல்லெண்ணெயும், எள் பொடியும் கலந்து நைவேத்யம் செய்தார். இவற்றை எல்லாம் சனி பகவான் ஒரு தூணில் மறைந்து நின்று கண்டு ரசிக்க, போகமார்த்த பூண்முலையாள் நாயகனாம் சிவன், பிரசன்னமாகி, நளன் வாட்டம் போக்கினார்.

பின் சனி பகவானை நோக்கி, ‘இங்கே நில். இன்று தொட்டு உனக்கும் ஈஸ்வரன் என்ற பெயர் சேரட்டும் என்றார். அன்று முதல் சனி பகவான், சனீஸ்வரன் ஆனார்.

சூரிய குமாரன் ஆனதால், வாரத்தில் வரும் முதல்நாள் சூரியனுக்கும், கடைசி நாள் சனிக்கும் என்று வகுத்தார்கள். சனிக்கு கருமை உடல். எனவே, காக்கை வாகனம். கறுப்பு வஸ்திரம். கருப்பு தான்யமாக எள். எள் எண்ணெய் அவர் விரும்புவது. நீலக் குவளை மலர், வன்னி இலை, புளு சபையர் என்ற நீலக்கல் என அனைத்தும் சனீஸ்வரனுக்கு நளன் படைத்து வணங்கினார். அவரை வணங்கும் முன், நளமகாராஜன் ஒரு குளத்தை வெட்டினார். இதுவே நள தீர்த்தம் என இன்றும் போற்றப்படுகிறது. நள தீர்த்தத்தில் எள் எண்ணெய் தேய்த்து நீராடிய பின், பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதை சனீஸ்வரர் நேசிக்கிறார்.

இப்படி செய்வதினால் எப்படிப்பட்ட தோஷமும், நவகிரஹ கோளாறும் நீங்கும் என்கிறது நாடி. சனிக்கிழமைகளில் ஒரு பொழுது உணவு உண்ணாது விரதம் இருப்பது ஐஸ்வர்யம், ஆரோக்கியம், ஆயுள் எல்லாம் விருத்தி அடையும் என்கிறார் அகஸ்தியர். திருநள்ளார் கோயிலை நளச் சக்ரவர்த்தி கட்டியபின், 7ம் நூற்றாண்டு தொட்டு பற்பல மன்னர்கள் கோயிலை விரிவுபடுத்தினர்.
நாடியில் திருநள்ளார், ‘நள ஈஸ்வரம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பெயர்ச்சி ஏற்படும்.

அப்படி சனி பெயர்ச்சி அன்று உதயாதி வேளையில் கோதை நாச்சியாரால் ஆக்கப்பட்ட திருப்பாவையும் மற்றும் திருவெம்பாவையும் பாராயணம் செய்யப்படுகிறது. ஏனெனில், சனி பகவானை, ‘ஸ்ரீவிஷ்ணு ப்ரியாயை நம’ என்று நாரதர் போற்றுகிறார். நள மகாராஜன் சொன்ன சனி பகவான் ஸ்தோத்திரத்தை ஒரு நாளைக்கு 107 முறை (108 அல்ல),  காலைவேளையில் ஜபித்து வந்தால் கண் திருஷ்டி அகலும். சனி பகவானின் அதாவது சனி ஸ்வரனின் பெரிய அருள் சித்திக்கும்:

சனி பகவான் ஸ்தோத்திரம்:
‘ஓம் அங் ஹ்ரீம் ஸ்ரீங் சங்
சநைஸ்வராய நம: ஓம்’


சனீஸ்வரனின் தாயார் சாயா தேவி. எனவே சனி பகவானின் அர்த்தசாம பூஜையை பக்தர்கள் காணக் கூடாது என்பார்கள். தாயார் சாயாதேவி, தனியாக மகனை தரிசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவானின் பிரசாதத்தையோ, சிவபெருமானின் பிரசாதத்தையோ வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டாலும், திருநள்ளாறு சனீஸ்வர பிரசாதத்தை வீட்டிற்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர் சித்தர்களும் ரிஷிகளும். புரட்டாசி மாத பௌர்ணமி பூஜையும், மகாசிவராத்திரி பூஜையும், சனி பெயர்ச்சி பூஜையும் சாலச் சிறந்தவை. இந்த காலங்களில் இங்கு தங்கி வழிபட்டால், முடியாதது ஒன்றும் இல்லை. எதையும் சாதிக்கலாம் என்கிறார் அகஸ்தியர். இங்குள்ள கலிதீர்த்த விநாயகரைத்தான் முதலில் தொழ வேண்டும் என்பது மரபு.

‘சத்தியம் ஓதுவோம் கேளீர் பாருக்குள்ளே ஏதும் சாதிக்கலாம் தர்ப்யராண்யத்துறை மந்தனாரை மகிமையால் பூஜிக்கவே, 
குட்டமும் நட்டமுந்தீரும். இதய பீடை தவிடு பொடியாகும்.
பட்ட துயரெலாம் நீராகும். சனி யவனால் மேன்மை 
யெல்லாஞ் சித்திக்க காண்பீரே’‘எப்பாவமும் போக்குவான் 
வழிக்கு துணையாய் இருப்பான் வழக்கின் போக்கை மாற்றுவான் 
வாழ்வில் சொல்லொணா மேன்மை தருவான்
சனி என்னும் இவ்வீசன் குடிகொளும் தர்ப்பரான்யத்தே யிருந்து’ 
‘மரகத விடங்கடனால் உன் விதி மாறும் பாரு
திண்ணமாய் சொன்னோம் சோதித்து பாரீர்’ 
என்று பலவாறாக அகஸ்தியர் திருநள்ளார் சனீஸ்வரன்
பெருமையைப் பேசுகிறார்.

Monday, December 5, 2011

சுகபோக வாழ்வு அருளும் சுக்கிர பகவான்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்ப, துன்பங்கள், ஏற்ற, இறக்கங்கள், லாப, நஷ்டங்கள் மாறி மாறி வருகிறது. இது  இயற்கையின் நியதி என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணிய பலமே காரணமாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்கு தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக திசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. 

பெரும்பாலும் எல்லாரும் எதிர்பார்ப்பது, ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி.

தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக் கூடியதே. எல்லா வகைகளிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்று போற்றப்படுகிறார். தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திர காரகன். அதாவது வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய திசா காலமான 20 வருடங்கள் மிகப் பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் நீசம், 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.

ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகங்கள் யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுக வாழ்க்கை கிட்டும்.சுக்கிரன் பலம் பெற்று இருந்தாலும் பலம் குறைந்து இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். 


வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மன், அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். 
பவுர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். 
ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். 
கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர ஸ்தலம். அங்கு தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார் சுக்கிர பகவான். 
இவரை வழிபட்டால் எந்த வகையான திருமண தடைகளும் நீங்கும். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று சேர்வார்கள்.

கணவன் & மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்துவைத்து அவர்களிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடிய திருத்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. 

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் என்ற கோயில் சுக்கிரனுக்கு உரிய ஸ்தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 
வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.