Saturday, June 25, 2011

அருள்வாக்கு.காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள்

ஆசை அடங்கமாட்டேனென்றாலும் திரும்பத் திரும்ப அடக்கப் பார்த்துக் கொண்டேதானிருக்க வேண்டும். வைராக்யம் என்பதான ஆசையின்மையை, பற்றின்மையை ஸம்பாதித்துக்கொள்ள விடாமுயற்சி பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால், ஆசை என்ற இந்த ஒரே ஒரு சத்ருவை எப்படியோ ஒரு தினுஸில் எப்பாடுபட்டாவது நாம் ஒழித்துக் கட்டிவிட்டால் போதும் - அப்புறம் நாம் ராஜாதான். ராஜா என்றால் இந்த உலகத்து ராஜா இல்லை. அவனுக்கு உள்ள ஆசையும் தொல்லையும் நமக்கு வேண்டவே வேண்டாம். நான் சொல்வது ஆசை, தொல்லை கிட்டேயே வராத சாச்வத சாந்தத்தை உடைய ராஜா.

பல நூறாயிரம் கெட்ட விருத்திகளை ஒவ்வொன்றாய் அடக்கப் பார்த்து பிரயோஜனமில்லை. அது முடியாத காரியம். ஆகையால் அவை கிளைகள் என்றால் அவற்றுக்கு வேராக உள்ள ஆசை என்ற ஒன்றை வெட்டிவிட்டால் போதும். ஆனால், வெளியே நீண்டிருக்கும் கிளையை வெட்டுவதைவிட உள்ளே புதைந்துள்ள வேரைத் தோண்டி அழிப்பது ரொம்பவும் கஷ்டம்தான். இருந்தாலும் இதைச் செய்யாவிட்டால் வெட்டிய கிளைகள் மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டு தானிருக்குமென்பதால் எப்படியாவது இதை ஸாதிக்கத்தான் வேண்டும்.

இப்படியே ஸகல கஷ்டத்துக்கும், ஸகல துர்விருத்திகளுக்கும் தாய்ப்பூச்சியாயுள்ள ஆசையை அழிக்காமல், அந்தக் கஷ்டம் ஒவ்வொன்றையும் நிவர்த்தி செய்து கொள்ளவும், ஒவ்வொரு துர்விருத்தியாகப் போக்கிக் கொள்ளவும் பாடுபட்டால் அவ்வளவும் நிஷ்பலனாகத்தான் ஆகும். காரணத்தை அழிக்காமல் விடும்வரை விளைவுகளை நிரந்தரமாக அழிப்பது என்பது நடக்காத கார்யம்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்