Saturday, April 28, 2012

பிழைகளுக்கெல்லாம் தலையாய பெரிய பிழை எது.

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக் கெல்லாம் தலையாய பெரிய பிழை அறிவு தரும் நல்ல நூல் களைக் கல்லாமையே ஆகும். நல்ல நூல்களைக் கற்கும் போது, அறிவு மேம்படும். அதனால் தான் இறை வனை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்பர்.

* மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியும் அன்று, குலமும் அன்று, பருமனும் அன்று, உயரமும் அன்று. அது எதுதான் என்றால் அறிவு மட்டுமே. வள்ளுவர் இதனையே அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று குறிப்பிடுவார்.

* மலை புரண்டுவரினும், கடல் கொந்தளித்துப் பொங்கி னாலும், வானம் இடிந்து தலை மீது விழுந்தாலும் தர்மம் காட்டிய நல் வழியில் சத்தியத்தை விடாது கொண்டி ருக்கும் செயலே வீரச் செயலாகும்.


* பொறுமை கடலினும் பெரிது என்பர். பொறுமை ஒருவனுக்கு புகழைத் தரவல்லதாகும். புண்ணியவான்களிடமே பொறுமை குடிகொண்டிருக்கும்.


உலகம் கூட அழிந்துவிடும். ஆனால், பொறுமை மிக்கவரின் புகழ் அழிவதில்லை.

* மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டாகும். அவை அறவழியில் செலவழித்த பொருளும், பூஜைக்காக செலவழித்த நேரமும் ஆகும்.

-வாரியார்

Wednesday, April 18, 2012

நம்மிடமுள்ள கெட்ட பழக்கத்தை விடுவது எப்படி.

கெட்ட பழக்கங்கள் வருவது எளிது. அவற்றை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் சிலர் திண்டாடிக் கொண்டிருகின்றனர். 

அதற்கு ஞானி ஓருவர் கூறிய எளிய வழி ..
 
ஒருசமயம் பக்தன் ஒருவன், ஞானியிடம் சென்று தனக்கு ஏற்பட்ட சூதாடும் பழக்கத்தை எப்படி விடுவது என்று கேட்டான். 

ஞானி உடனே தன் பக்கத்தில் உள்ள ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூண் என்னை விடமாட்டேன் என்கிறதே! என்றார். 

 பக்தன், சுவாமி! நீங்கள் தூணை விடவேண்டியதுதானே! ஏன் விடமாட்டேன் என்கிறீர்கள்? என்றான். 

இதுபோலத்தான் நீயும் கெட்ட பழக்கத்தைவிட வேண்டும். அது உன்னை பிடித்துக்கொண்டு இருக்கவில்லை. 

நீதான் அதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறாய் எனக் கூற, பக்தன் சூதாடும் பழக்கத்தை விட்டுவிட்டான். 

எனவே எந்த தீய பழக்கமும் நன்மை பிடிக்க வில்லை.நாம் தான் அவற்றை பிடித்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.

Tuesday, April 10, 2012

திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்.

1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று  பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

 எத்தனை எத்தனை கோவிந்தன்கள்! :

திருப்பதி திருமலையில் த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீநிவாசர், மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி


இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி


கொலுவு என்றால் ஆஸ்தானம் என்று பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி


இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

Thursday, April 5, 2012

பில்லி, சூன்யம், ஏவல் தொல்லைகளில் இருந்து விடுபட

எங்கெல்லாம் சரபேசரின் சிலை உள்ளதோ,  அங்கெல்லாம் ஸ்ரீ கவச ஜலூசர் என்னும் சித்தரின் ஆத்மா , சிலை வடிக்கும் போதே உள்ளே புகுந்து விடுகிறது.
தனி சிலையாக இருந்தாலும், தூணில் இருந்தாலும் ....



அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில் - திருப்புவனம் 

 
சரபேசர் அவதார நோக்கம் என்ன? அவரை வணங்குவதால் என்ன பலன்கள் என்று காண்போம்..

ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல், இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுகிறது.

இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் "பட்சிகளின் அரசன்" என்றும் "சாலுவேஸ்வரன்" என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். 

இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். "நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி" என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது.  சிதம்பரம் கோவிலில்  தனிச் சன்னதி உள்ளது.  

ஞாயிற்றுக் கிழமை , தின பிரதோஷ நேரம் வரும் ராகு கால வேளையில் - சரபேசர் வழிபாட்டில் , கலந்து கொள்ளுங்கள்...

ஞாயிற்று கிழமை - பிரதோஷம் வந்தால் , தவறாமல் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்..  அபரிமிதமான பலன்கள் ஏற்படும்..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் , நவக்கிரக சந்நிதி அருகில் - சரபேசர் சிலை , தூணில் உள்ளது... மஞ்சள் அல்லது சந்தன காப்பு அணிந்து நீங்கள் வேண்டினால், கேட்டது கிடைக்கும்..

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும்.குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.
 
நன்றி:http://www.livingextra.com/2011/02/blog-post_7490.html