Monday, December 5, 2011

சுகபோக வாழ்வு அருளும் சுக்கிர பகவான்


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்ப, துன்பங்கள், ஏற்ற, இறக்கங்கள், லாப, நஷ்டங்கள் மாறி மாறி வருகிறது. இது  இயற்கையின் நியதி என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணிய பலமே காரணமாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்கு தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக திசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது. 

பெரும்பாலும் எல்லாரும் எதிர்பார்ப்பது, ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி.

தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக் கூடியதே. எல்லா வகைகளிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்று போற்றப்படுகிறார். தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திர காரகன். அதாவது வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய திசா காலமான 20 வருடங்கள் மிகப் பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் நீசம், 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.

ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகங்கள் யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுக வாழ்க்கை கிட்டும்.சுக்கிரன் பலம் பெற்று இருந்தாலும் பலம் குறைந்து இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். 


வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்மன், அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். 
பவுர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். 
ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். 
கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர ஸ்தலம். அங்கு தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார் சுக்கிர பகவான். 
இவரை வழிபட்டால் எந்த வகையான திருமண தடைகளும் நீங்கும். கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று சேர்வார்கள்.

கணவன் & மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்துவைத்து அவர்களிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடிய திருத்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. 

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் என்ற கோயில் சுக்கிரனுக்கு உரிய ஸ்தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 
வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

No comments:

Post a Comment