Sunday, July 17, 2011

தாயுமானவர் அருளிய தத்துவ உண்மைகள்.

* செல்வம், செல்வாக்கு, சுதந்திரம் போன்ற வாய்ப்புகள் அமைந்தால் தான் அரும்பெரும் செயல்களைச் செய்ய முடியும் என்று எண்ணுபவர்கள் உள்ளனர். ஆனால், வாய்ப்பை உருவாக்கிக் கொள்வது என்பது மனிதனுடைய மன நிலையைப் பொறுத்ததாகும்.
 

* நல்லவர்களிடமிருந்து நல்ல வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்வாழ்க்கைக்கு புத்தகங்களும், சொற்பொழிவுகளும் உள்ளன என்றாலும், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தாமே வாழ்ந்து, நமக்கு வழிகாட்டுகின்றனர் மகான்கள். வாய்ப்பேச்சால் இல்லாது, வாழ்க்கை மூலம் அவர்கள் நமக்கு புகட்டும் பாடமே மேன்மையானதாகும்.
 

* மூக்கு கண்ணாடியின் நிறத்திற்கு ஏற்ப பார்க்கும் பொருள்களின் நிறமும் மாறுபடும். அதுபோல் மனம் என்ற கண்ணாடியில் கெட்ட மனமுடையவர்க்கு உலகம் கேடானது. நல்ல மனமுடையவர்களுக்கு உலகெல்லாம் நல்லது. மனம் என்னும் கண்ணாடியை உடைத்தவர்க்கு அனைத்தும் கடவுள் மயமாகும்.
 

* நம் வாழ்நாளில் கடந்த பகுதி கனவாகப் போய்விட்டது. எஞ்சியிருக்கும் நாட்களும் கனவுபோல் ஆகிவிடும். இதை எண்ணிப் பார்த்து, இறைவனிடம் நம் அறியாமையை அகற்ற பிரார்த்திக்கலாம்.
 

* நமது தொலைநோக்கு பார்வை பிறருக்கு நல்லதைச் செய்வதாக இருக்க வேண்டும். பார்வையோ, சைகையோ, சொல்லோ பிறரை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது. அதுபோல், வீண்பேச்சு கூடாது. பிறருடைய குறைகளைப் பெரிதுபடுத்தக் கூடாது. நல்லதையே பேசினாலும் கூட அளவுடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.
 

* நமது நல்வாழ்வுக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, உயர்ந்த எண்ணங்களை உள்ளத்தில் எண்ணிப் பார்த்து பழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். ஆற்றலுடன் நல்லறிவு அமைய இதுவே நல்ல வழி. எதிலும் அவசரம் இல்லாமல், கடமையை ஒழுங்காகச் செய்து கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம்.
 

* ஒவ்வொரு செயலையும் முறையாகக் கையாள தனித்தனி முறைகள் உள்ளன. உடல் என்ற இயந்திரத்தை இறைவன் மூலம் கையாளுதலே நல்ல தந்திரம்.
 

* பிறந்த குழந்தை மல்லாந்து கிடக்கிறது, முயன்று முயன்று குப்புறப்படுக்கிறது, தவழ்கிறது, நிற்கிறது, கீழே விழுகிறது, பிடித்துப் பிடித்து நடக்கிறது. தத்தி நடக்கிறது, பின்பு நேரே நடக்கிறது. இதேபோன்று இறைவணக்கத்திலும், பக்தன் முயன்று முயன்று மேல்நிலைக்கு வரவேண்டும்.
 

* உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. நமக்கு வேண்டப்பட்டவர் அழிகின்றனர், நண்பர்கள் விலகிச் செல்கின்றனர், செல்வம் அழிகிறது. ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவ னும் ஒன்றேயாகும்.
 

* விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர்கள் புகுவதில்லை. அதுபோல், மனதிற்குள் தெய்வத்தை நினைத்து, ஞான விளக்கேற்றி வைத்திருப்பவர்களின் நெஞ்சத்தில் அற்பமான எண்ணங்கள் நுழைவதில்லை.
 

* கப்பல் கடலில் நிற்கும் போது அதன் காந்த ஊசி வடதிசையை காட்டி நிற்கும். வாழ்வில் மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கிடையே அவனுடைய மனது என்ற காந்தஊசி கடவுள் என்ற குறியையே நாடியிருக்க வேண்டும்.
 

* நோயால் உடல் வலிமை குறைவது போல், மனதில் தோன்றும் கெட்ட எண்ணம் மனஆரோக்கியத்தை அழிக்கிறது. உள்ளத்தில் தோன்றும் தீயஎண்ணத்தை அகற்றுவதன் மூலம் கெட்ட நோய்களாகிய கெட்ட எண்ணங்கள் மனத்திலிருந்து நீங்கி, வெளியுலகில் நல்ல தொடர்பு ஏற்படுகிறது.

No comments:

Post a Comment